இஸ்லாத்தில் கந்தூரி உணவு ஹராமானதா.?

 உமது இறைவனுக்காக தொழுவீராக! (அவனுக்காகவே) அறுப்பீராக (108:02)-முன்திர்
மரணித்துப்போன மகான்களின் பெயரால் கால்நடைகளை அறுத்து உணவு சமைத்து அதை ஏழைகளுக்கு வழங்கும் நிகழ்வை கந்தூரி என மக்கள் அழைக்கின்றனர். முதலில் கந்தூரி என்ற
வார்த்தை அறபு மொழி வார்த்தை அல்ல.

இஸ்லாத்தின் பரம விரோதியாக வாழ்ந்து மடிந்த அபூஜஹ்ரலுக்குக் கூட 'கந்தூரி' என்ற வார்த்தை தெரியாது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கும் இந்தக் கந்தூரியைத் தெரியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கந்தூரி கொடுத்ததாகவோ அருமைத் தோழர்கள் 'நார்ஸா' வினியோகம் செய்ததாகவோ 'இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்' கூட இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிர்வாழ்ந்த காலத்தில், தனக்கு முன் வாழ்ந்து மறைந்த போன இறைத்தூதர்களை நினைவு கூர்ந்து எந்த விருந்தும் படைக்கவில்லை.

வருடாந்தக் கந்தூரி என்ற பெயரில் மஸ்துந்நபவியை அலங்கரிக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் மரணித்து பல நூறு வருடங்கள் கழிந்ததன் பிற்பாடு மார்க்க அறிவற்றவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட அநாச்சாரமே 'கந்தூரி' ஆகும். குத்பு நாயகம் என்ற பெரியாருக்காக கால்நடைகளை அறுத்துக் கொடுத்தால் அக்கந்தூரிக்கு குத்பிய்யாக் கந்தூரி என்று சொல்லப்படும். ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தீ என்ற பெரியாருக்காக ஆடு மாடுகளை அறுத்துக் கொடுத்தால் அக்கந்தூரிக்கு ஹாஜாஜீ மகா கந்தூரி என்று சொல்லப்படும். ஜௌஹர் ஷாஉல் என்பவருக்காக மாடுகள் அறுத்துக் கொடுத்தால் ஹாஜா மக்காம் கந்தூரி என்று சொல்லப்படும்.

ஷாகுல் ஹமீது பாதுஷா என்பவருக்காக கல்முனையில் அறுத்துக் கொடுத்தால் கடற்கரைக் கந்தூரி என்று சொல்லப்படும். 
இன்னும் 'புஹாரி கந்தூரி, குருந்தையடி அப்பா நாயகம் கந்தூரி, கோட்டமுனை அப்பா கந்தூரி' என்று பல கந்தூரிகளை நடாத்த ஆங்காங்கே சங்கங்களும் திருச்சபைகளும் உருவாக்கப் பட்டுள்ளன. ஏழைகளுக்கு உணவு வழங்குவதை இஸ்லாம் மறுக்கவில்லை. ஆனால் மகான்களின் பெயரால் அறுத்துக் கொடுப்பதை இஸ்லாம் மறுக்கின்றது. அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவற்றை உண்ணலாகாது என திருமறையில் அல்லாஹ் கூறுகின்றான்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (02:173)

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன (05:03)

தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, மற்றும் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக் கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை'' என்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (06:145)

இந்த வசனங்கள் அனைத்தும் 'அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவற்றை' உட்கொள்ளக்கூடாது என்பதை எமக்கு அழுத்தமாகப் போதிக்கின்றன. அல்லாஹ், பன்றியின் இறைச்சியைத் தடை செய்யும் வரிசையிலேயே அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட உணவையும் சேர்த்துள்ளான். ஆதலால் கந்தூரியில் வினியோகம் செய்யப்படும் நார்ஸாக்களை உட்கொள்வது பன்றி இறைச்சியை உட்கொள்வதற்குச் சமனாகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கந்தூரியினால் பலர் இலாபம் அடைகின்றனர். கந்தூரி நடாத்தும் போலிகள் பொதுமக்களை நோக்கி 'உங்கள் நேர்ச்சைகளைக் கொடுங்கள்' 'உங்கள் காணிக்கைகளை வழங்குங்கள்' என்று கூறி பல இலட்சங்களை வசூலித்து விடுகின்றனர். இஸ்லாம் பற்றிய போதிய அறிவில்லாத அப்பாவிகள் அன்றாடம் உழைப்பதில் பெரும் பங்கை 'கந்தூரி காணிக்கை' எனக் கூறி தனியாக எடுத்து வைத்து பின்னர் பெருந்தொகையாக அள்ளிக் கொடுத்து விடுகின்றனர். இதன் மூலம் தமக்கு அவ்லியாவின் அருள் கிடைப்பதாக நம்புகின்றனர். கந்தூரிக்கு காணிக்கைகளை அள்ளிக் கொடுத்தால் அவ்லியா நமது கஷ்ட நஷ்டங்களை அல்லாஹ்விடம் எடுத்துரைப்பார் என்ற குருட்டு நம்பிக்கையே இன்னும் கந்தூரிகள் உயிர்வாழ்வதற்கு அடிப்படைக் காரணமாகும்.

அன்று மக்காவில் விக்கிரக வழிபாட்டில் ஈடுபட்ட காபிர்களின் நம்பிக்கையும், இன்று கந்தூரி உரூஸ் விழாக்களில் பங்கேற்பவர்களின் நம்பிக்கையும் ஒன்றாகவே உள்ளன.  அல்லாஹ் திருமறையில்
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (39:03)


என்றும் அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக! (10:18)

இவ்விரு வசனங்களும் அன்றைய இறைநிராகரிப்பாளர்களின் நம்பிக்கையைக் கூறினாலும் இதே நம்பிக்கையில் தான் இன்று கந்தூரிக்கு நேர்ச்சை கொடுப்பவர்களும் உள்ளனர்.  கந்தூரியில் நாங்கள் மாட்டை அறுக்கும் போது 'பிஸ்மில்லாஹ்' என்று தான் கூறுகின்றோம் என கந்தூரியை நியாயப்படுத்துவோர் கூறிவருகின்றனர். இஸ்லாத்தில் ஒரு பிராணியை அறுக்கும் போது இரு நிபந்தனைகள் உள்ளன. ஒன்று பிஸ்மில்லாஹ் கூற வேண்டும். இரண்டாவது 'அல்லாஹ்வுக்காக மட்டுமே அறுக்க வேண்டும்' இவ்விரு நிபந்தனைகளில் ஒன்று மீறப்பட்டாலும் அதனை உட்கொள்ள முடியாது.

இவர்களைப் பொருத்தமட்டில் 'பிஸ்மில்லாஹ்' என்று சொன்னாலும் அவ்லியாவின் பெயராலேயே அறுத்துக் கொடுக்கின்றனர். கந்தூரியில் அறுக்கப்படும் இறைச்சியை பொதுமக்களுக்கு தர்ஹா நிருவாகம் வினியோகித்தாலும் அதன் மூலம் அவ்லியாக்களிடம் (பறகத்) புண்ணியத்தை எதிர்பார்க்கின்றனர். இவர்களின் நோக்கம் சரியில்லை என்பதே நமது வாதமாகும். கந்தூரியில் விநியோகிக்கப்படும் நார்ஸாவுக்கு இவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்தே இவர்களின் நோக்கத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இந்துக்கள் தங்கள் கோவில்களில் உட்சவ விழாக்களின் போது பிரசாதம் வழங்குவார்கள். பிரசாதம் என்பது சக்கரை போன்ற பதார்த்தங்களை கலந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப் பொருளாகும். மிகச் சாதாரண பொருளாக கடைகளில் விற்பனைக்கு இருந்த சக்கரை சாமிக்கு முன் பூஜிக்கப்பட்டவுடன் புண்ணியம் பொருந்திய பொருளாக மாறிவிடுகின்றது. அத்துடன் அதன் பழைய பெயர் மறைந்து 'பிரசாதம்' என புதிய பெயர் வந்து விடுகின்றது. ஜனாதிபதி உட்பட பெரும் பெரும் அரசியல்வாதிகள் வரை வரிசையில் நின்றே அதை வாங்கும் காட்சிகளை கோவில்களில் நாம் காணுகின்றோம். இதே தோரணையிலேயே கந்தூரி நார்ஸாவும் தயாராகின்றது.

மேலும்பார்க்க >
                    * இயேசு சிலுவையில் அறையப்படவில்லை..( அதிகமாக பகிருங்... 
                    * இஸ்லாம் மதுவை பற்றி என்ன சொல்லுகின்றது பார்ப்போம்
                    * ஸக்காத் வழங்குவதாக நேர்ச்சை செய்யலாமா.. ?
                    * மிஸ்வாக் செய்வது தொடர்பாக சில நபிமொழிகள்.
                    * வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழுகை தொழலாமா.?
                    * முத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள...


            

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget