Latest Post

ஒரு மனிதன் சில உதவிகள் செய்யும் போது, அல்லது ஒரு நல்ல காரியத்தை செய்து கொடுக்கும் போது, அவரது சேவை தொடராக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் உங்களின் ஆயுளை நீளமாக்குவானாக ! என்று நேரடியாக சொல்வார்கள். அல்லது சம்பந்தப்பட்டவர் பக்கத்தில் இல்லை என்றால் அவரது ஆயுளை அல்லாஹ் நீடித்து வைப்பானாக என்று பிரார்த்தனை செய்வார்கள்.

இப்படி பிரார்த்தனை செய்வதற்கு இஸ்லாம் அனுமதி தருகிறதா என்பதை ஹதீஸின் ஊடாக விடை காண்போம்.
தாயின் கர்ப்ப அறையில் தீர்மானிக்கப்பட்ட அம்சங்கள்…
ஒரு மனிதன் தனது தாயின் கர்ப்பத்தில் சிசுவாக இருக்கும் போது, ஏற்கனவே அல்லாஹ்வால் தீர்மானிக்கப்பட்ட அவனது சகல விசயங்களையும் ஒரு மலக்கின் மூலமாக அந்த நேரத்தில் அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான், என்பதை பின் வரும் ஹதீஸின் மூலமாக நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
“உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அவர் அதில் உயிரை ஊதுகிறார். (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விஷயங்களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகிறார்.

எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அந்த ஓரிறைவன் மீதாணையாக! உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்துகொண்டே செல்வார். அவருக்கும் சொர்க்கத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார்.
(இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரகவாசிகளின் (தீய)செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5145)

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையிலான அத்தனை விசயங்களும் முடிவு செய்யப்பட்டுவிட்டன. எந்த விசயமும் இதன் பிறகு கூட்டப்படவும் மாட்டாது. குறைக்கப்படவும் மாட்டாது. எது நடந்தாலும் தீர்மானிக்கப்பட்ட விசயத்திற்குள்ளேயே மட்டும் தான் நடக்கும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
பிரார்த்தனையைப் பொருத்தவரை அல்லாஹ் குர்ஆன் மூலமும், நபியவர்கள் ஹதீஸின் மூலமும் தாராளமாக அனுமதி தருகிறார்கள். வேண்டிய து ஆக்களை அல்லாஹ்விடம் கேட்டுக் கொள்ளலாம். எதை கேட்டாலும் ஏற்கனவே முடிவு செய்த அம்சங்கள் மட்டும் தான் நடைபெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் ஒரு மனிதன் தனது ஆயுள் நீடிப்புக்கோ அல்லது வெறொருவரின் ஆயுள் நீடிபுக்கோ துஆ கேட்கலாமா என்றால், நபியவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை தடை செய்கிறார்கள் என்பதை பின் வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது.
“அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், "இறைவா! என் கணவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் தந்தை அபூசுஃப்யான், என் சகோதரர் முஆவியா ஆகியோர் (நீண்ட நாட்கள் வாழ்வதன்) மூலம் எனக்குப் பயனளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீ (ஏற்கெனவே) நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஆயுளையும் குறிக்கப்பட்டு விட்ட (வாழ்)நாட்களையும் பங்கிடப்பட்டுவிட்ட வாழ்வாதாரத்தையும் அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறாய். அல்லாஹ் அவற்றில் எதையும், அதற்குரிய நேரத்திற்கு முன்பே ஒருபோதும் கொண்டு வந்துவிடவுமாட்டான்; அவற்றில் எதையும்,அதற்குரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்தவுமாட்டான். நரக நெருப்பின் வேதனையிலிருந்தோ, அல்லது மண்ணறையின் வேதனையிலிருந்தோ உன்னைக் காக்கும்படி நீ அல்லாஹ்விடம் வேண்டியிருந்தால் நன்றாகவும் சிறந்ததாகவும் இருந்திருக்கும்" என்று சொன்னார்கள்… ( முஸ்லிம் 5176)

அது போல நபியவர்கள் அல்லாஹ்விடம் யா அல்லாஹ் ! தள்ளாடும் வயதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று அடிக்கடி து ஆ கேட்பார்கள் என்பதையும் ஹதீஸில் நாம் காணலாம்.
எனவே நீண்ட ஆயுளை நபியவர்கள் விரும்ப வில்லை என்பதை இப்படியான ஹதீஸிலிருந்து விளங்கலாம். அதனால் தான் எனது உம்மத்தின் வயதெல்லை அறுபதுக்கும் எழுபதுக்கும் இடைப்பட்ட காலம் என்று கூறினார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.இந்த விசயத்தில் மாற்றுக் கருத்துகள் இருந்தால் ஹதீஸின் அடிப்படையில் பதிவுகளை பதிந்தால் பொருத்தமாக இருக்கும்.


                                                                              மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் தப்பிச் சென்று விட்டார்கள் என்ற செய்தி மக்கமா நகர் முழுவதும் பரவியவுடன் முஹம்மதையோ, அல்லது அபூ பக்கரையோ, உயிருடனோ,அல்லது கொலை செய்தோ இங்கு கொண்டு வந்தால் இவ்விருவரில் ஒவ்வொரு தலைக்கும் நூறு ஒட்டகங்கள் அன்பளிப்பாக வழங்கப்படும் என்ற அறிப்பு எதிரிகளால் செய்த உடன் அதற்காக மக்கள் பல பகுதிகளில் தேட ஆரம்பிக்கிறார்கள்.
சுராக்கா இப்னு மாலிகின் பேராசை…
எப்படியாவது நபியவர்களையும், அபூபக்கரையும் பிடித்து கொடுத்து இருநூறு சிவந்த ஒட்டகங்களையும் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நப்பாசையில் அவர் சொல்வதை நீங்களே படியுங்கள். “நான் அவர்கள் இருவரையும் தேடுவதற்கு முன் எனது சகுனம் காட்டும் அம்பை எடுத்து குறி பார்ப்பதற்காக எறிந்தேன். அது எனது விருப்பத்திற்கு மாற்றமாகவே குறி காட்டியது.

இருந்தாலும் நான் எனது கூர்மையான ஈட்டியை எடுத்துக் கொண்டு, வேகமாக பாய்ந்து செல்லும் குதிரையின் மீதேறி தேடி போகும் போது, நபியவர்களையும், அபூபக்கர் அவர்களை நான் கண்டு விட்டேன். நபியவர்கள் ஒட்கத்தின் மீதிருந்த வண்ணம் குர்ஆனை ஓதிக் கொண்டே போனார்கள். ஆனால் அபூபக்கர் அவர்களோ, யாராவது பின்னால் தேடி வருகிறார்களா என்று திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே போனார்கள்.

நான் வேகமாக அவர்களின் பக்கத்தில் போன போது, எனது குதிரையின் இரண்டு முன் காலின் மூட்டு வரை பூமி உள்ளே இழுத்துக் கொண்டது. நான் குதிரையிலிருந்து இடரி கீழே விழுந்தேன். மீண்டும் எனது சகுனம் காட்டும் அம்பை எடுத்து குறி பார்ப்பதற்காக எறிந்தேன் அது எனது விருப்பத்திற்கு மாற்றமாகவே குறி காட்டியது. இருந்தாலும் இருநூறு ஒட்டகங்களுக்கு ஆசைப்பட்டு, அவர்களை பிடிப்பதற்காக பின் தொடர்ந்தேன்.

மீண்டும் பூமி குதிரையை இழுத்து பிடித்துக் கொண்டது. நான் இடரி கீழே விழுந்தேன். அப்போது “முஹம்மது அல்லாஹ்வின் தூதராக தான் இருப்பார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். நபியவர்களிடம் எனக்காக பிரார்த்திக்கும் படி வேண்டினேன், நபியவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நான் எனக்காக கொண்டு சென்ற உணவிலோ, வேறு எதையும் அவர்கள் என்னிடம் இருந்து எடுக்கவில்லை, நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கேட்டேன், யாரையும் இந்த பக்கம் வரவிடாமல் திருப்புவீராக, என்றார்கள்.

எனது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரும் படி நான் நபியவர்களிடம் வேண்டினேன். சரி என்றார்கள். நான் எழுத்து வடிவத்தில் கேட்டேன். அப்போது “ஆமிர் இப்னு புஹைரா” மூலம் தோலில் பாதுகாப்பு உறுதி எழுதி கொடுத்தார்கள்.
ஸவ்ர் குகையும், எதிரிகளும்…
மிகப்பெரிய ஸவ்ர் என்ற மலை உச்சியில் இருவரும் ஏறி அங்கிருந்த குகைக்குள் ஒழிந்து கொள்கிறார்கள். இருநூறு சிவந்த ஒட்டகத்திற்கு ஆசைப்பட்டு மக்கத்து காபிர்கள் ஒரு இடம் விடாமல் தேடி அலைகிறார்கள். இறுதியில் நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் வந்து விடுகிறார்கள். சற்று குனிந்துப் பார்த்தால் இருவரையும் கண்டு பிடித்து விடலாம். அந்த அளவிற்கு எதிரிகள் நெருங்கி விட்டார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்களே ! எதிரிகள் பக்கத்தில் வந்து விட்டார்கள் என்ற பயத்துடன் அபூ பக்கர் அவர்கள் சொன்னார்கள். பயப்படாதீர்கள் நாம் இருவரல்ல, நாம் மூவர் அதாவது அல்லாஹ்வுடைய துணை நமக்கு இருக்கிறது பயப்படாதீர்கள், என்று அபூபக்கரின் கவலையை நபியவர்கள் போக்கினார்கள். இறுதி வரை எதிரிகளின் கண்களுக்கு அல்லாஹ் அவர்களை காட்ட வில்லை, அந்த குகையில் மூன்று நாட்கள் தங்கினார்கள்.
ஆட்டிடையனுடன் நபியவர்கள்…
மதீனாவை நோக்கி இருவரும் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவ்வழியே வந்து கொண்டிருந்தான். அப்போது இது யாருடைய ஆடு என்று கேட்டார்கள். இது இன்னார்,இன்னார், உடைய ஆடுகள் என்று சொல்லப்பட்டது, ஒரு ஆட்டிலிருந்து பாலை கரந்து இருவரும் வயிறு நிரைய தாராளாமாக குடித்தார்கள். மீண்டும் மதீனா பயணத்தை தொடர்ந்தார்கள்.
அபூபக்கரை சந்தித்த மனிதர்…
மதீனாவை நோக்கி போய் கொண்டிருக்கும் போது அபூபக்கர் அவர்களுக்கு தெரிந்த ஒருவர் எதிரே வந்தார். ஆனால் நபியவர்களை யாரென்று அவருக்கு தெரியாது. அப்போது அபூபக்கர் அவர்களே ! இது யார் என்று நபியவர்களை காட்டி அம்மனிதர் கேட்டார். இவர் எனது வழி காட்டி என்று அபூபக்கர் அவர்கள் கூறிவிட்டு. மதீனாவை நோக்கி பயணத்தை தொடர்ந்தார்கள். அவர் எனது வழி காட்டி என்று நான் சொன்னது, நபியவர்கள் மார்க்கத்திற்கு எனது வழிகாட்டி என்றடிப்படையிலும், அவருக்கு வழி காட்டி என்று சொன்னது பயணத்திற்கான வழி காட்டி என்றடிப்படையிலும் கூறினேன் என்று சொல்லிக் கொண்டார்கள்.
வணிகக் குழுவும், நபியவர்களும்…
மதீனாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ஷாம் நாட்டிலிருந்து தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஒரு முஸ்லிம் வணிககுழு மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த குழுவில் இருந்த “சுபைர் பின் அல்அவ்வாம்” (ரலி) அவர்கள் நபியவர்களையும், அபூபக்கர் அவர்களையும் தனது வெண்ணிற துணியால் போர்த்தி அப்படியே மதீனாவிற்கு வழியனுப்பி வைத்தார்கள்.
மதீனமா நகரும், மக்களும்…
நபியவர்களும், அபூபக்கர் அவர்களும், மக்காவை விட்டு,விட்டு மதீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள், என்ற செய்தி மதீனா மக்களுக்கு கிடைத்த உடன் நபியவர்களை வரவேற்ப்பதற்காக சந்தோசத்தில் ஒவ்வொரு நாளும் மதீனாவின் எல்லை பகுதியான “அல்ஹர்ரா” என்ற இடத்திற்கு தினமும் பகல் நேரம் வரை எதிர்ப்பார்த்திருந்து திரும்பி செல்வார்கள்.
ஒரு நாள் ஒரு யூதன் தனது வீட்டிற்கு மேல் ஏறி வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் மதீனாவை நெருங்கியதை கண்ட உடன் அவன் தன்னையறியாமல் சத்தம் போட்டு, அரபு மக்களே ! இதோ நீங்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நபி வந்து விட்டார் என்று செய்தி மதீனா நகர் முழுவதும் பரவியவுடன், எல்லா மக்களும் ஆர்வத்தோடு ஓடி வந்து நபியவர்களையும், அபூபக்கர் அவர்களையும் வரவேற்றார்கள். ஆயுதங்களுடன் அந்த இடத்திற்கு வருகை தந்து, முழு ஆயுத பாதுகாப்போடு இருவரையும் மதீனாவிற்குள் உற்ச்சாகத்துடன் அழைத்து செல்கிறார்கள்.
குபா பள்ளியை நிறுவுதல்…
மதீனா மக்களுக்கு யார் நபி, யார் அபூபக்கர், என்று தெரியாது. வயதில் மூத்தவராக காணப்பட்ட அபூபக்கர் அவர்களையே அனைவரும் நபி என்று எண்ணிக் கொண்டு நெருங்கிக் கொண்டிருந்தார்கள். சூரியன் உச்சியை அடைந்து, வெயில் கடுமையான போது, அபூபக்கர் அவர்கள் தனது ஆடையால் நபியவர்களுக்கு அப்படியே நிழல் இடுகிறார்கள். அப்போது தான் நபியவர்கள் யார் என்பதை மக்கள் கண்டு கொள்கிறார்கள்.
அதன் பிறகு முட்டி, மோதிக் கொண்டு நபியவர்களுக்கு முகமுன் கூறினார்கள். குபாவில் உள்ள “பனு அம்ர் பின் அவ்ஃப்” குலத்தாரின் குடியிருப்பில் பத்து நாட்கள் தங்கி குபா பள்ளியை நிறுவினார்கள்.அந்த பள்ளியில் நபியவர்கள் தொழுதார்கள்.
மஸ்ஜிதுன் நபவியை நிறுவுதல்…
குபாவிலிருந்து மதீனாவிற்குள் நபியவர்கள் மக்களோடு ஒட்டகத்தில் சென்றார்கள். அந்த ஒட்டகம் தற்போது மஸ்ஜிதுன் நபவி அமைந்துள்ள இடத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டது. அந்த இடம் ஆரம்ப காலத்தில் பேரீத்தம் பழங்கள் காய வைக்கும் இடமாக இருந்தது. இது யாருடைய இடம் என்று நபியவர்கள் விசாரித்த போது, அது “ஸஅத் பின் சுராரா(ரலி) அவர்களின் பொருப்பிலிருந்த “சஹ்ல், மற்றும் “சுஹைல், என்ற இரண்டு சகோதர அநாதை சிறுவர்களுக்கு சொந்தமான இடம் என்று சொல்லப்பட்டது.
அந்த இடத்தை நபியவர்கள் விலை பேசினார்கள். இந்த இடத்தை அல்லாஹ்விற்காக நாங்கள் அன்பளிப்பாக தருகிறோம் என்று அவர்கள் கூறினார்கள். அநாதைளின் சொத்தை வெறுமனே சும்மா நபியவர்கள் எடுக்க விருப்பமில்லாமல். விலை கொடுத்தே வாங்கினார்கள்.
அதன் பிறகு குறிப்பிட்ட நாட்கள் அபி அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்களின் வீட்டில் தங்கினார்கள்.
“அப்துல்லாஹ் பின் ஸலாம்” இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளல்…
யூத அறிஞராகவும், யூதர்களுக்கு மத்தியில் அதிகம் மதிப்புமிக்கவராகவும் காணப்பட்ட அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள் நபியிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் நபியிடம் கேட்ட சில கேள்விகளை பின் வரும் ஹதீஸில் காணலாம்.
“அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். 'தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்' என்று கூறினார். பிறகு, '

1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 
2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?
 3. குழந்தை தன் தந்தையின் சாயலிலோ, தன் தாயின் சாயலிலோ இருப்பது எதனால்?' என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், 'சற்று முன்பு தான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்' என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'ஜிப்ரீல் தான் வானவர்களிலேயே யூதர்களுக்குப் பகைவராயிற்றே!' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். 

சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின் சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது' என்று பதிலளித்தார்கள். 

(உடனே) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், தாங்கள் இறைத்தூதர் தாம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்' என்று கூறினார்கள். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். எனவே, நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தியை அவர்கள் அறிவதற்கு முன்னால் தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்' என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் (நபி - ஸல் - அவர்களிடம்) வந்தார்கள். (உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) வீட்டினுள் புகுந்து (மறைந்து) கொண்டார்கள்.) நபி(ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு சலாம் எத்தகைய மனிதர்?' என்று கேட்டார்கள். 

அதற்கு அவர்கள், 'அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் மகனும் ஆவார்; எங்களில் சிறந்தவரும், சிறந்தவரின் மகனும் ஆவார்' என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு சலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!' என்று கூறினார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் முன்பு போன்றே கேட்டார்கள். அதற்கு அவர்கள் முன்பு போன்றே பதிலளித்தார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் வெளியே வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்' என்று கூறினார்கள்.

உடனே யூதர்கள், 'இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்' என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) குறை கூறலானார்கள். (அவற்றைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'இதைத் தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன் இறைத்தூதர் அவர்களே! என்று கூறினார்கள் (புகாரி 3938)
மேற் குறிப்பிட்ட நிகழ்வுகள் யாவும் நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு செல்லும் வரை நடந்தவைகளாகும். மேலும் இவைகள் அனைத்து புகாரியிலிருந்து தொகுக்கப்பட்டதாகும்.


                                                              மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

முஹர்ரம் மாதம் வந்து விட்டால், நபியவர்களின் ஹிஜ்ரத்தைப்பற்றி பல ரீதியான செய்திகளை தொடராக பேசி வருவார்கள். நபியவர்களின் வரலாறுகள் அடிக்கடி பேசப்பட வேண்டும். அந்த வரலாறுகளில் சொல்லப்பட்ட சான்றுகளை படிப்பினையாக நாம் வாழ்க்கையில் எடுத்து நடக்க வேண்டும்.  
அந்த வரிசையில் இந்த ஹிஜ்ரத் ஏன் நடைப் பெற்றது, அந்த ஹிஜ்ரத்தின் மூலம் நபியவர்கள் நமக்கு என்ன பாடங்களை சொல்லித் தருகிறார்கள், என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.
நபியவர்களின் ஹிஜ்ரத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக முஹம்மது மக்காவிலிருந்து பயந்து மதீனாவிற்கு ஓடினார் என்றும், பிழைப்பு தேடி மதீனாவிற்கு சென்றார் என்றும், நபியவர்களும், அவரின் தோழர்களும் இடம் பெயர்ந்து மதீனாவிற்குச் சென்றதாக இப்படி பல கதைகளை அளந்து விட்டிருந்தாலும், ஹிஜ்ரத்தின் உண்மையான நோக்கத்தை நபியின் வரலாற்றிலே நாம் காணலாம்.
ஹிஜ்ரத்தின் நோக்கம்…
அல்லாஹ் காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்றால் போல் நபிமார்களை தொடராக அனுப்பிக் கொண்டே இருந்தான். இறுதி நபியாக முஹம்மது (ஸல்) அவர்களை மக்கமா நகரை மைய்யப்படுத்தி உலக மக்களுக்கு நபியாக தேர்ந்தெடுத்து அனுப்பினான். 
பொதுவாக அந்தந்த ஊர் மக்கள் நபிமார்களை தனது ஏகத்துவ பிரச்சார பணியை ஒழுங்காக செய்ய விடமாட்டார்கள். இதை ஆரம்ப கால நபி முதல் கடைசி வரையிலான நபிமார்களின் வரலாறுகளில் நாம் காணலாம். நபி கொண்டு வந்த மார்க்த்தை கொச்சைப்படுத்துவது, கிண்டல் அடிப்பது, யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ஏனைய சாதாரண மக்களை தடுப்பதும். 
தூண்டி விடுவதும், அவர் பைத்தியக்காரர், சூனியக்காரர், ஊரை இரண்டாக பிரிக்கவந்துள்ளார், குடும்பத்திற்குள் பிரச்சனைகளை ஏற்ப்படுத்த வந்துள்ளார். புதிய கொள்கையை திணிக்க வந்துள்ளார் என்று நபிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதோடு,, யார் மீறி நபியை ஏற்றுக் கொள்கிறாரோ அவரை கடுமையான முறையில் சித்தரவதை செய்து உச்சக்கட்ட தண்டனையாக கொலை செய்து விடுவார்கள்.
இதற்கு மத்தியில் தான் இறைவனின் தூய வஹி செய்தியை ஒவ்வொரு நபிமார்களும் கொண்டு சென்றனர். அந்த வரிசையில் தான், நபியவர்களும் தொடராக அல்லாஹ்வின் வஹி செய்தியை மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு எதிரிகள் பல வகையிலும் இடைஞ்ல்கள் செய்துக் கொண்டே இருந்தார்கள்.
நபியின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களை அநியாயமான முறையில் அடித்து, துன்புறுத்தி, சுடு மண்ணில் இழுத்துச் சென்று சித்தரவதை செய்தார்கள். சுமையா (ரலி) அவர்களையும்,மற்றும் அவரது கணவர் யாசிர் (ரலி) அவர்களையும் கடுமையான முறையில் கொடுமைப்படுத்தி, இறுதியில் உயிருடன் கொலை செய்தார்கள்.
நாளுக்கு நாள் எதிரிகளின் அட்டகாசங்கள் அதிகரிக்கவே அல்லாஹ்வின் கட்டளைப்படி நபியவர்கள் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் பயணம் செல்வதற்கு தயாராகுகிறார்கள்.

படிப்பினைகள்…
(1) யார் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறாரோ, அவர் பல மனித சோதனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்.
(2) இஸ்லாத்தை ஏற்றப்பின் எதுவும், எந்த நேரத்திலும் நடக்கலாம்.
(3)அல்லாஹ்விற்காக சொந்தம், பந்தம், சொத்து சுகங்களை, ஏன் இறுதியில் ஊரை விட்டும் வெளியேறுவதற்கு தயாராகவே இருக்க வேண்டும்.
 (4)உயிரையும் அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்க வேண்டும்.
நபியவர்களின் அழகிய திட்டமிடல்…
நீங்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் போகலாம் என்ற இறை கட்டளை கனவின் மூலமாக வந்தவுடன் நபியவர்கள் கண்ணை மூடிக் கொண்டு உடனே மதீனாவிற்கு போகவில்லை மக்காவிலிருந்து மதீனாவிற்கு செல்வதற்கான பல ஆயத்தங்களை முதலில் திட்டமிட்டு செய்கிறார்கள்.
தன்னோடு தோழர் அபூபக்கரை அழைத்துச் செல்வதற்கு முடிவு செய்து அவர்களுடன் பயணத்திற்கான முழு ஏற்ப்பாடுகள் சம்பந்தமாக ஆலாசனை செய்கிறார்கள்.
மக்காவிலிருந்து செல்வதற்கு வழிக்காட்டி ஒருவர் தேவை, ஏன் என்றால் நபியவர்களுக்கோ, அபூபக்கர் அவர்களுக்கோ, மதீனா செல்வதற்கு சரியாக பாதை (வழி) தெரியாது. மதீனாவிற்கு வழிக்காட்டியாக “பனு அப்த் பின் அதீ குலத்தில் பனு அத்தீல் எனும் கிளையை சேர்ந்த குறைஷி இறை மறுப்பாளர், அப்துல்லாஹ் பின் உரைக்கித்தை தங்களின் பயணத் தோழராக தெரிவு செய்கிறார்கள். 
இவர் நம்பிக்கையானவர் ஆனால் அவர் முஸ்லிம் கிடையாது. தாங்கள் பயணம் செல்வதற்காக இரண்டு ஒட்டகங்களை நான்கு மாதங்களாக தயார் செய்து இறுதியில் “அப்துல்லாஹ் பின் உரைகிதிடம் கொடுத்து மூன்று நாட்கள் கழித்து குறிப்பிட்ட இடத்திற்கு வரும் படி ஒட்டகத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டார்கள்.
அபூ பக்கர் அவர்கள் நபியவர்களுக்கு ஒரு ஒட்டகத்தை சும்மா தான் கொடுத்தார்கள். ஆனால் எனக்கு சும்மா வேண்டாம், கிரயத்தை கொடுத்தே நபியவர்கள் அபூபக்கரிடம் அதை விலைக்கு வாங்கினார்கள்.
அடுத்ததாக ஹிஜ்ரத் செல்லும் வழியில் தங்குவற்காக “ஸவ்ர்” குகையை தெரிவு செய்கிறார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்குவதற்கான பின்வரும் ஏற்ப்பாடுகளையும் முன்னேற்பாடாக செய்கிறார்கள்.
குகையில் தங்கியிருக்கும் போது உணவை கொண்டு வருவதற்காக அபூபக்கரின் மகளான அஸ்மா அவர்களை தெரிவு செய்கிறார்கள். அஸ்மா அவர்கள் உணவை கொண்டு வரும் போது அவரின் கால் பாத அச்சை (சுவட்டை) ஆடுகளை ஓட்டிச் சென்று அழிப்பதற்காகவும், ஆட்டிலிருந்து பாலை கரந்து குடிப்பதற்காகவும், அபூ பக்கர் அவர்களின் முன்னால் அடிமையான “ஆமிர் இப்னு புஹைரா அவர்களை தெரிவு செய்கிறார்கள். 
தங்களைப் பற்றி மக்கத்து காபிர்கள் (எதிரிகள்) என்ன பேசிக் கொள்கிறார்கள் என்ற தகவலை இரவு நேரத்தில் கொண்டு வருவதற்காக அபூபக்கரின் மகன் அப்துல்லாவை தெரிவு செய்கிறார்கள். அப்துல்லாஹ் பின் அபீபக்கர் அவரகள் இரவு நேரத்தில் இவர்களுடன் குகையில் தங்கி ஸஹர் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் வந்து விடுவார்கள்.இப்படியே மூன்று இரவுகள் செய்தார்கள்.
நபியவர்கள் தனது வீட்டிலிருந்து செல்லும் போது வீட்டில் தங்க வைப்பதற்காக அலி (ரலி) அவர்களை தெரிவு செய்கிறார்கள். இப்படி பல திட்டங்களை செய்த பின் அபூபக்கர் அவர்களிடம் நீங்கள் தயாராக இருங்கள் எந்த நேரத்திலும் நான் உங்கள் வீட்டை நோக்கி வரலாம் என்று நபியவர்கள் கூறினார்கள்.
ஒரு நாள் பகல் நேரம் நபியவர்கள் தலையை மூடிக் கொண்டு அபூபக்கர் அவர்களின் வீட்டிற்கு சென்று, எனக்கு ஹிஜ்ரத் செல்ல அனுமதி வழங்கப்பட்டு விட்டது, வாருங்கள் நாம் ஹிஜ்ரத் போவோம் என்று மதீனாவை நோக்கி புனித ஹிஜ்ரத் பயணம் செல்கிறார்கள்.
அல்லாஹ் நபியவர்களையும், அபூபக்கர் அவர்களையும், பாதுகாத்த செய்தியை பின்வருமாறு குறிப்பிடுகிறான்
“ (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். (8-30)
எனவே ஒரு மனிதர் ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன், அது சம்பந்தமாக பல முன் ஏற்ப்பாடுகளையும், திட்டங்களையும், தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதையும், அல்லாஹ்வின் மீது கடைசி வரை நம்பிக்கையிருக்க வேண்டும் என்பதையும், இந்த ஹிஜ்ரத் நமக்கு பல முக்கிய பாடங்களையும், படிப்பினைகளையும், கற்றுத் தருகிறது. அல்ஹம்து லில்லாஹ் !

                                                                                                        
மௌலவி :- யூனுஸ் தப்ரீஸ்

கேள்வி : இஸ்லாமிய மார்க்கத்தில் மாதவிடாய் வரக்கூடிய குழந்தை பெறத் தகுதியுடையவர்கள், கணவன் இறந்த பின்பு இத்தா' இருப்பது (4 மாதம் + 10 நாள்) ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள், மாதவிடாய் பிரச்சனை காரணமாக, கர்ப்பப் பையை அகற்றியவர்கள், தள்ளாத வயதுடைய கிழவி இவர்களுக்கு இத்தா' அவசியமா?
பதில் :  இறந்து போன கணவனின் கருவை மனைவி சுமந்திருக்கிறாரா? என்பதை அறிவது இத்தாவுடைய நோக்கங்களில் மிகவும் முக்கியமானதாகும்.
கணவன் இறந்த சில நாட்களில் மனைவிக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் அவள் கருவில் குழந்தை வளரவில்லை என்பது உறுதியாகத் தெரிந்து விடும். ஆனாலும், இஸ்லாம் கூறும் சட்டத்தின்படி உடனே அவள் மறுமணம் செய்ய முடியாது. நான்கு மாதங்களும், பத்து நாட்களும் கழிந்த பிறகு தான் மறுமணம் செய்ய முடியும்.
அவளது கருவறையில் முதல் கணவனின் கரு வளரவில்லை என்பது மாதவிடாய் வந்த உடனேயே தெரிந்துவிடும். அப்படி இருந்தும் நான்கு மாதமும் பத்து நாட்களும் அவள் ஏன் காத்திருக்க வேண்டும்? கரு வளரவில்லை என்பது அவளுக்கு மட்டும் தெரிந்தால் போதாது; உலகம் அறியும் வகையில் வெளிப்படை யாக அது நிரூபிக்கப்பட வேண்டும் என அல்லாஹ் விரும்புவதாலேயே இவ்வாறு கூறியிருக்க முடியும்.
இவ்வாறு வெளிப்படையாக நிரூபிக்க வேண்டும் என்பதற்குப் பல நியாயமான காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களை விளங்கிக் கொண்டால் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
ஒரு பெண் தனது கருப்பையில் குழந்தை வளர வில்லை என்பதை மாதவிலக்கு வருவதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், மாதவிடாய் வராமலேயே மாதவிடாய் தனக்கு வந்து விட்டதாக ஒரு பெண் பொய் கூறி உடனடியாக மறுமணம் செய்ய நினைக்கலாம்.
இவ்வாறு செய்தால் இரண்டாம் கணவன் ஏமாற்றப்படுகிறான்.
மறுமணம் செய்து குறுகிய கால கட்டத்தில் குழந்தையை அவள் பெற்றெடுத்தால் இரண்டாம் கணவன், தனது குழந்தை இல்லையெனக் கருதுவான். தன்னை ஏமாற்றி விட்டதாக எண்ணி அவளையும் வெறுப்பான். இது அவளது எதிர்காலத்துக்கே கேடாக முடியும்.
எனவே தான் தனது வயிற்றில் குழந்தை இல்லை என்பதை அனைவருக்கும் தெரியும் வகையில் அவள் நிரூபிக்க வேண்டும். நான்கு மாதமும் பத்து நாட்களும் கடந்த பின் அவளது வயிறு வெளிப்படையாக பெரிதாகா விட்டால் அவள் வயிற்றில் முதல் கணவனின் வாரிசு இல்லை என்பதற்கு அவளை அறிந்த அனைவரும் சாட்சிகளாக இருப்பார்கள்.
இதனால் தான் நான்கு மாதமும் பத்து நாட்களும் என்ற அதிகப்படியான காலத்தை இஸ்லாம் நிர்ணயித்திருக்கிறது.
மாதவிடாய் வராமலே வந்து விட்டதாகப் பொய் கூறுவது போல் தனது கர்ப்பப்பை எடுக்கப்பட்டு விட்டதாகவும் பொய் கூறலாம். 
குடும்பக் கட்டுப்பாடு செய்த பலருக்கு அதன் பிறகும் குழந்தை பிறக்க சாத்தியம் உள்ளது. அவ்வாறு சில நேரங்களில் பிறந்தும் இருக்கிறது.
மாதவிடாய் பருவம் முடிந்த பிறகும் அரிதாக குழந்தை பெற்ற பெண்கள் உள்ளனர்.
எனவே சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளிப்படையாக நிரூபிப்பது தான் இரண்டாம் கணவன் சந்தேகப்படாமல் மகிழ்ச்சியுடன் அவளை நடத்த துணை செய்யும்.
மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் மருத்துவ சோதனை மூலம் உறுதி செய்ய முடியும் அல்லவா?
அந்த முடிவின் அடிப்படையில் உடனே அவள் மறு மணம் செய்யலாமே? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். மருத்துவர்களும் மனிதர்கள் தான். அந்தப் பெண் பொய் செல்வது போல் மருத்துவர்களும் பொய் சொல்வார்கள். அனைத்து மருத்துவர்களும் இவ்வாறு பொய் சொல்ல மாட்டார்கள் எனினும் பொய் சொல்லக் கூடிய மருத்துவர்களும் உள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் கண்டுபிடிக்கத் தெரியாத மருத்துவர்களும் இருப்பதையும் நாம் மறுக்க முடியாது.
விதி விலக்காக நீங்கள் சுட்டிக் காட்டியவர்களும் அரிதாக கருவுறுவதும் நடக்கக் கூடியது தான். விதவை விவாகத்தை இன்றைக்கும் மறுக்கக் கூடியவர் கள் உள்ள நிலையில் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே விதவைகள் மறுமணத்திற்கு வழிகாட்டியது மட்டுமின்றி இரண்டாம் திருமணத்தால் அவளுக்கு சங்கடங்கள் ஏதுவும் விளைந்து விடாமல் தக்க ஏற்பாட்டையும் இஸ்லாம் செய்துள்ளது. அது தான் இத்தா.

இறைவா ! துக்கத்திலிருந்து , கவலையிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக . ஆதரவற்ற நிலையிலிருந்தும் சோம்பலிருந்தும் , கஞ்சத்தனத்திலிருந்தும் என்னை பாதுகாப்பாயாக . கடன் சுமையிலிருந்தும் பிறர் என் மீது ஆதிக்கம் செலுத்துவதிலிருந்தும் என்னைப் பாதுகாப்பாயாக !கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்கல் விளையாட்டுக்கு பெயர்போனது. உண்மையில் இந்த கடற்கரை விளையாட்டு நிகழ்வுக்கு பயன்படும் கடற்கரையாகும்.

அறுகம்பை குடாவை அண்டிய பகுதியில் அலையின் வேகம் குறைவாக உள்ள காரணத்தினால் இந்த பகுதியில் வெளியூர் உள்ளுார், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதும் நீந்துவதும் சறுக்குவதுமாய் இருப்பர்.

இந்த பிரதேசம் அதிகம் முஸ்லிம்கள் வாழும் பிரதேசம் என்ற காரணத்தினால் அதிகப்படியான உள்ளுர் வெளியுர் முஸ்லிம்கள் இந்த கடற்கரையில் குளிப்பர், இந்தக்கடற்கரையில் நுாற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குளிப்பதை காணலாம்.

அல்லாஹ் கூறுகிறான்: நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). (அல்குர்ஆன்: 4:34)

முஸ்லிம் என்ற தனித்துவத்தை நாம் மறந்து செயற்படுகிற பொழுது அதிக இன்னல்களுக்கு நாம் ஆளாகிறோம், அண்ணலார் சொன்ன பிரகாரம் வாழாமல் இருப்பதாலேயே நாம் இன்று பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளோம்.  
 
அறுகம்பை கடற்கரையில் முஸ்லிம் பெண்கள் ஹபாயா மற்றும் சல்வார், சோட்டி (இரவு நேர உடை) போன்றவற்றுடன் குளிக்கின்றனர், கடற்கரையில் ஒரு பெண் மூடிய ஆடையுடன் குளித்தால் ஒரு முறை நீர் பட்டால் உடை அப்படியே மேனியுடன் ஒட்டிவிடும், இது வீட்டில் குளித்தாலும்தான், பகிரங்கமாக ஒட்டிய ஆடையுடன் குளி்ப்பது எவ்வளவு தவறு, எவ்வளவு விரசம் எத்தனை ஆண்கள் பார்ப்பர்? 

ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)

மேனி பருத்த மேனியாக இருந்தால் சொல்லவே தேவையில்லை, உள்ளாடைகள், மார்பகங்கள், இன்னோரன்ன பகுதிகள் மொடல் அழகிகள் போல காட்சி தரும் இதனை பார்க்கவே அதிக ஆண்கள் இந்த கடற்ரைக்கு செல்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலான முஸ்லீம் ஆண்கள் நடந்து கொள்ளும் முறைகள் மற்ற மதத்தினராலேயே கடுமையாக விமர்சிக்கப் படுவதுதான் மிக கவலையான விஷயமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர் அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை முதலாம் பிரிவினர் யார்எனில் பசுமாட்டின் வாலைப்போன்று நீண்ட சாடடைகளை தம்மிடம் வைத்துக் கொண்டு மக்களை அடிக்கும் கூட்டத்தினர் (இரண்டாம் பிரிவினர் யாரெனில்) மெல்­ய உடை அணிந்து தம் தோள்களைன சாய்த்த படி (குலுக்கி குலுக்கி கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தம் பக்கம் ஈர்க்ககூடிய பெண்கள் ஆவர் அவர்களின் தலை (முடி) சரிந்து நடக்ககூடிய கழுத்து நீண்ட ஒட்டகத்தைப்போன்று இருக்கும் இவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்ôர்கள் (ஏன்) அதன் வாதையை கூட நுகர மாட்டார்கள் சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு தொலைவி­ருந்து வீசிக்கொண்டிருக்கும்.நூல்: முஸ்­ம் (5098)

ஒரு பெண் தன் கணவன் முன்னால் எப்படியும் இருந்து கொள்ளலாம் ஆனால் தனியாக இருக்கும் போது கணவன் முன்னால் அமருவதைப்போன்று அமரக்கூடாது ஏனென்றால் ஆண்களுக்கு தனியாக இருக்கும் போது என்ன தடை போட்டார்களோ அதை தடை பெண்களுக்கும் பொருந்தும் எனவே பெண்களும் தனியாக இருக்கும் போது மறும உறுப்பை காத்துக்கொள்ள வேண்டும்.

கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்”இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.” (புகாரி)

ஆனால் இன்று பல ஆண்களும் பெண்களும் ஒன்றாக குளிக்க கூடிய நிலைமையை பார்க்கின்றோம் இதை குடும்பம் குடும்பமாக மார்க்கத்தை மறந்து உலக இன்பத்துக்கு அடிபணிந்து ஒவ்வொரு ஆண்மகனும் வேக்கப்பட வேண்டும்.


யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது,அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும். அல் குர்ஆன் 2:161

முந்தானைகள் மூலம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகளையெல்லாம் அன்னிய ஆண்களுக்கு முன் வெளிக்காட்டிக் கொண்டு திரிகின்ற இத்தகைய பெண்கள் தங்கள் நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும் அத்துடன் இறைவனிடம் இதற்கு கடும் தண்டனை உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், இது மாபெரும் தவறு, பொத்துவில் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல், பொத்துவில் முஸ்லிம் துாய இளைஞர்கள் அமைப்பு, முஸ்லிம் சமூக அமைப்புகள் இது குறித்து கவனம் எடுக்கும் அதே வேளை தங்கள் சகோதரிகளை, மனைவிமார்களை அழைத்துவந்து மற்றைய ஆண்களுக்கு விருந்து படைக்கும் இந்த குளியலை முஸ்லிம் ஆண்களும் தவிர்த்து கொள்ளுங்கள்.

"அல்லாஹ்வின் சாபத்தை மற்றும் மூமின்கள் மலக்குகள் சாபத்தை வாங்கிகொண்டவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது" அல்லாஹ் அக்பர் முஸ்லிம் பெண்களே திருந்தி கொள்ளுங்கள்! விடாதே. இந்தசத்திய மார்கத்திலேயே எங்களது உள்ளங்களை நிலைத்து இருக்க செய்வாயாக!.

                                                                        ஆக்கம்:- பாரிஸ்  தூயவழி.காம்

மங்கி மறைந்து போய்க் கொண்டிருக்கும் இஸ்லாமிய இயல்புகளில் ஒன்றுதான் திக்ர் எனும் இறை தியானம், இறை நினைவாகும்.
அல்லாஹ்வை பல விதங்களில் திக்ர் செய்யலாம். தொழுகை, பயான் மஜ்லிஸ்கள் கூட திக்ர்தான். இவ்வாறே சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி போன்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி நாவுகளால் அல்லாஹ்வை திக்ர் செய்வதும் சுன்னாவாகும் இவ்வாறு செய்யும் பழக்கம் எம்மிடம் மங்கி மறைந்துவிட்டது!
ஒவ்வொருவரும் தம்மைத் தாமே சுய விசாரணை செய்து கொள்வதற்காக இங்கே இது நினைவு கூறப்படுகின்றது.
மனிதனைப் படைக்கப் போவது பற்றி அல்லாஹ் மலக்குகளிடம் கூறிய போது,
‘நாங்கள் உன் புகழைத் துதித்துக் கொண்டும் உன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டும் இருக்கின்றோம். பூமியில் குழப்பம் விளைவிப்பவர்களையா படைக்கப் போகின்றாய் எனக் கேட்கின்றனர். (2:30)
இதிலிருந்து படைப்புக்களின் நோக்கங்களில் அல்லாஹ்வைத் துதிப்பதும் ஒன்று என்பதை அறியலாம்.
உள்ளம் அமைதிபெறும்:
இன்று வாழ்வதற்கான சகல வசதிகளையும் வளங்களையும் பெற்றவர்களும் நிம்மதியில்லாமல் நிலை குலைந்து போயுள்ளனர். அல்லாஹ்வை திக்ர் செய்வதன் மூலமாக உள்ளங்கள் அமைதி பெறும் என அல்குர்ஆன் உள அமைதிக்கு வழிகாட்டுகின்றது.
‘நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலம் அமைதி பெறுகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.” (13:28)
கல்லாகும் உள்ளங்கள்:
இறை நினைவால் உள்ளங்கள் உருகுகின்றன. கல்லான உள்ளங்கள் கனிகின்றன. இறை தியானம் இல்லாவிட்டால் உள்ளம் கல்லாகும். இதனைப் பின்வரும் வசனம் மூலம் அறியலாம்.
‘நம்பிக்கை கொண்டோருக்கு, அவர்களது உள்ளங்கள், அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கும், (அவனிடமிருந்து) இறங்கிய சத்தியத்திற்கும் அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், இதற்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டோர் போன்று இவர்கள் ஆகிவிட வேண்டாம். அவர்களுக்கு (தூதர்களின் வருகையின்) காலம் நீண்டுவிட்டது. அதனால், அவர்களது உள்ளங்கள் கல்லாகிவிட்டன. அவர்களில் அதிகமானோர் பாவிகளாவர்.” (57:16)
இறை நினைவுதான் பெரியது:
இஸ்லாமிய இபாதத்துக்களின் நோக்கம் சதாவும் இறை நினைவுடன் வாழ்வது என்பதுதான்.
‘(நபியே!) இவ்வேதத்தில் உமக்கு வஹியாக அறிவிக்கப்பட்டதை நீர் ஓதிக் காட்டுவீராக! மேலும், தொழுகையை நிலை நாட்டுவீராக! நிச்சயமாகத் தொழுகை மானக்கேடானதையும், வெறுக்கத்தக்கதையும் விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைவு கூருவது மிகப் பெரிதாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான்.” (29:45)
தொழுகையும் இறை நினைவுக்கே!:
ஐந்து நேரத் தொழுகையை இஸ்லாம் கடமையாக்கியிருப்பதும் இறை நினைவு மங்கி மறையாமல் மனதில் மலர்ந்து கொண்டும் மணத்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.
‘என்னை நினைவுகூர்வதற்காகத் தொழுகையை நிலைநாட்டுவீராக!” (20:14)
திக்ரின் பக்கம் விரையுங்கள்:
வெள்ளிக்கிழமை குத்பாவையும் தொழுகையையும் குர்ஆன் ‘திக்ர்” என்கின்றது. அதேவேளை, ஜும்ஆ முடிந்து வெளியில் பொருள் திரட்டும் போதும் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்வது வெற்றிக்கான வழி என்றும் குர்ஆன் கூறுகின்றது.
‘நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமை தினத்தில் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள். இன்னும், வியாபாரத்தையும் விட்டுவிடுங்கள். நீங்கள் அறிந்து கொள்பவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.”
‘தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் நீங்கள் பரந்து சென்று, அல்லாஹ்வின் அருளிலிருந்து தேடிக்கொள்ளுங்கள். மேலும், நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்.” (62:9-10)
அதிகம் திக்ர் செய்ய வேண்டும்:
எம்மிடம் திக்ர் செய்யும் பழக்கம் மங்கி மடிந்துவிட்டது. ஆனால், அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்யுமாறு எமக்குக் குர்ஆன் கட்டளையிடுகின்றது.
‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூருங்கள்.”(33:41)
‘மேலும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.” (33:42)
காலையிலும், மாலையிலும்:
நாம் காலையிலும் மாலையிலும்தான் அதிக டென்ஷனுக்குள்ளாகுகின்றோம். ஏற்கனவே நாம் பார்த்த வசனம் காலையிலும், மாலையிலும் விஷேடமாக அல்லாஹ்வை திக்ர் செய்யச் சொல்கின்றது. மற்றும் பல வசனங்களும் காலை, மாலை திக்ரை வலியுறுத்துகின்றன.
‘உமது இரட்சகனின் பெயரைக் காலையிலும், மாலையிலும் நினைவு கூர்வீராக!”
(76:25)
பள்ளிகளில் அதிகம் அல்லாஹ்வின் பெயர் நினைவு கூறப்பட வேண்டும்:
‘எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான்” என்று கூறியதற்காக எவ்வித நியாயமுமின்றி அவர்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் சிலரை மற்றும் சிலர் மூலம் அல்லாஹ் தடுக்கா திருந்திருப்பின் ஆச்சிரமங்களும், கிறிஸ்தவ ஆலயங்களும், யூதர்களின் கோயில்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகம் நினைவு கூறப்படும் மஸ்ஜிதுகளும் தகர்க்கப்பட்டிருக்கும். அல்லாஹ் தனக்கு உதவி செய்பவருக்கு நிச்சயமாக உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமைமிக்கவன்; யாவற்றையும் மிகைத்தவன்.” (22:40)
இந்த வசனம் ஆலயங்கள் பள்ளிகளில் பாதுகாப்பு குறித்துப் பேசுகின்றது. மஸ்ஜித் பள்ளிகள் பற்றிக் கூறப்படும் போது அல்லாஹ்வின் பெயர் அதிகம் திக்ர் செய்யப்படும் இடம் என சிறப்பாக சிலாகித்துக் கூறப்படுவது கவனிக்கத்தக்கதாகும்.
பள்ளிகளில் அல்லாஹ்வின் பெயர் அதிகம் திக்ர் செய்யப்படுவதற்கும் பள்ளிகளின் பாதுகாப்புக்குமிடையில் ஏதோ தொடர்பு இருப்பதையும் இந்த வசனம் உணர்த்துவது போன்றுள்ளது.
அதிகம் தியாகம் செய்வோம்:
திக்ரின் சிறப்பு புரிகின்றது. அது எம்மிடமிருந்து மங்கி மறைந்து வருவதும் தெளிவாகத் தெரிகின்றது. எனவே, இறை நினைவை மரணிக்க விட்டு விடாது உயிர் கொடுத்து உறுதிப்படுத்த உறுதி கொள்வோம். அதிகமாக திக்ர் செய்யும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள முனைவோம்.
‘நிச்சயமாக முஸ்லிமான ஆண்களும், முஸ்லிமான பெண்களும், நம்பிக்கையாளர்களான ஆண்களும், நம்பிக்கையாளர்களான பெண்களும், அடிபணிந்து வழிபடும் ஆண்களும், அடிபணிந்து வழிபடும் பெண்களும், உண்மையாளர்களான ஆண்களும், உண்மையாளர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறு மையாளர்களான பெண்களும், உள்ளச்சமுடைய ஆண்களும், உள்ளச்சமுடைய பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், தர்மம் செய்யும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் நோன்பு நோற்கும் பெண்களும், தமது கற்புகளைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், காத்துக் கொள்ளும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைவுகூரும் ஆண்களும், நினைவுகூரும் பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.” (33:35)
இந்த வசனத்தில் எல்லா அமல்களையும் தொடர்ந்து சொல்லும் அல்லாஹ் திக்ர் பற்றிக் கூறும் போது மட்டும் ‘கதீரா” அதிகம் திக்ர் செய்பவர்கள் என்று கூறுகின்றான். அதிகமாக திக்ர் செய்ய வேண்டும் என்பதைத்தானே இது உணர்த்துகின்றது. 
அநியாயத்திற்குப் பின் உதவி:
அநீதமிழைக்கப்பட்ட சமூகத்திற்கு அல்லாஹ்வின் உதவி வர வேண்டும் என்றால் அதிகம் திக்ர் செய்யப்பட வேண்டும். இதைப் பின்வரும் வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.
‘யார் நம்பிக்கை கொண்டு, நல்லறங்களும் புரிந்து, அல்லாஹ்வையும் அதிகம் நினைவுகூர்ந்து, தாம் அநீதி செய்யப்பட்ட பின் வெற்றி பெற்றார்களோ அவர்களைத் தவிர. அநியாயம் செய்தோர் தாம் செல்லும் இடம் எது என்பதை விரைவில் அறிந்து கொள்வார்கள்.” (26:227)
வெற்றி வரும்:
எதிரிகளைச் சந்திக்கும் போது உறுதியாக இருக்க வேண்டும். அதே நேரம் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்ய வேண்டும். அது வெற்றிக்கு வழியாக அமையும் என குர்ஆன் கூறுகின்றது.
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (போரில்) ஏதேனும் ஒரு கூட்டத்தாரைச் சந்தித்தால் உறுதியாக இருங்கள். இன்னும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அல்லாஹ்வை அதிகம் நினைவு கூருங்கள்.” (8:45)
அழைப்புப் பணிக்கும் அவசியம்:
அழைப்பாளர்கள் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்பவர்களாக இருக்க வேண்டும் என குர்ஆன் குறிப்பிடுகின்றது. இந்தக் குணம் குன்றிக் குறைந்து போயுள்ளமை எம்மிடம் உள்ள மிகப் பெரும் குறையாகும்.
மூஸா(அலை) அவர்களிடம் அல்லாஹ் தூதுத்துவப் பணியை ஒப்படைத்த போது தனது பணியைத் திறம்படச் செய்ய பின்வருமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள்.
‘(அதற்கு மூஸா) ‘எனது இரட்சகனே! எனக்கு என் உள்ளத்தை நீ விரிவுபடுத்து வாயாக! எனக் கூறினார்.”
‘என் காரியத்தை எனக்கு இலகுபடுத்து வாயாக!”
‘என் நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடுவாயாக!”
‘(அப்போது) அவர்கள் எனது பேச்சை விளங்கிக் கொள்வார்கள்.”
‘எனது குடும்பத்திலிருந்து எனது சகோதரர் ஹாரூனை ஓர் உதவியாளராக நீ எனக்கு ஏற்படுத்துவாயாக!”
‘அவர் மூலம் எனது பலத்தை உறுதிப்; படுத்துவாயாக!”
‘என் காரியத்தில் அவரையும் இணைத்து விடுவாயாக! உன்னை நாம் அதிகம் துதிப்பதற்காக.”
‘உன்னை நாம் அதிகம் நினைவுகூர் வதற்காகவும் (இவ்வாறு செய்வாயாக!)” (20:25-34)
இதில் தனது சகோதரர் ஹாரூன்(அலை) அவர்களையும் நபியாக ஆக்குமாறு கேட்கின்றார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘உன்னை அதிகம் தஸ்பீஹ் செய்ய வேண்டும், அதிகம் திக்ர் செய்ய வேண்டும் என்பதுதான். எனவே, இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவுகூர வேண்டும். அதுதான் எமது பணியில் உயிரோட்டத்தையும் உளப்ர்வபூமான ஈடுபாட்டையும் உண்டாக்கும். இதற்காக எம்மை நாம் தயார் படுத்திக் கொள்வோமாக!
ஆக்கம் : மெளலவி இஸ்மாயில் ஸலபி

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget